செவ்வாய், 19 நவம்பர், 2013

நாடகக் கலைக்குள் நான் எப்படி?

                    எங்கள் ஊரில்( புதுக்கோட்டை நகர்ப்பகுதி பிச்சத்தான்பட்டி) ஆண்டுதோறும் காமன் பண்டிகை என்னும் விழா நடக்கும்.

                    பங்குனித் திங்கள் வளர் பிறை நாளில் காமன் ஊன்றுவதும், அதையடுத்த 16 ஆம் நாளில் காமன் எரிப்பதுமான விழா அது. 
( ரதி-மன்மதன் கதையை ஒட்டி)

                   காமன் எரிச்ச மூனாம்  நாளில் காமன் எரிந்த கட்சி எரியாத கட்சி என லாவணிக் கச்சேரி நடக்கும். ஊரே திரண்டு பாய் விரித்துப் படுத்தும் உட்கார்ந்தும் விடிய விடிய அந்நிகழ்ச்சியைப் பாப்பாங்க..

                 விவரம் தெரியாத வரை பாட்டி மடியில் படுத்துப் பார்த்தும் தூங்கியும் எழுந்த என்னைப் போன்ற சிறுவர்களுக்கு  தொடர்ந்து நடந்த அந்நிகழ்ச்சி அலுத்துப் போச்சு. 

              என்னொத்த வயசுப் பசங்க (13,14, வயசுதான்) சேர்ந்து அந்த ஆண்டு காமன் பண்டிகையிலே லாவணி கச்சேரிக்குப் பதிலா புதுசா ஏதாச்சும் ஒரு நிகழ்ச்சி வைக்கணுமுன்னு ஊர்க் கூட்டத்துல சொன்னோம்.

             கூட்டமாக் கத்துன குரலுக்குப் பலன் கெடைச்சுச்சு. அக்கம் பக்கத்துக் கிராமங்கள்லே நடத்துற மாதிரிக்  “கரகாட்டம்” வைக்க அந்த ஆண்டு முடிவு பண்ணுனாங்க.

              கிராமியக் கலைதானே நல்லாருக்குமுன்னு நெனைச்சா... அதுல குறவன் குறத்தி ஆடுன  ஆபாச ஆட்டம்  பொம்பளை  ஆளுங்களை  வீட்டுக்குள்ளேயே  வெரட்டிடுச்சு..

           அடுத்த ஆண்டு கரகாட்டத்துக்குப் பதிலா தெருக்கூத்து  ( வள்ளி திருமணம்)  நடத்துறதுன்னு  ஊரு முடிவு பண்ணுச்சு.

            அந்த வருசம் நடந்த வள்ளி திருமண்ம் நாடகத்துல . வந்த கோமாளியும் கூத்தாரியும் பேசுன அருவருப்பான  பச்சையும் கொச்சையுமான பேச்சும் , ஆடுன  அசிங்கமுமான ஆட்டமும் , வாலிபப் பசங்களை விசிலடிக்க வச்சாலும்  பெண்கள் மத்தியிலே எதிர்ப்பை உண்டாக்கிடுச்சு .

            ரெண்டு வருசமா நடந்த அந்தக் கூத்துல விடியுற  வரைக்கும் வள்ளிக்குத் திருமணம் நடக்காமலே நாடகம் முடிஞ்சது  “ பெரிசு” களுக்குப் பிடிக்கலே. அடுத்த வருசம் சந்திரமதி ஒப்பாரியோட அரிச்சந்திர மயான காண்டம் முடிஞ்சது.

          இதுக்கு மாற்றா ஏதாச்சும் சமூக நாடகம் நடத்தலாமுன்னு எங்க இளைஞர் குழு ஊர்க் கூட்டத்துலே சொல்லிப் பாத்தோம்
 ( அப்ப குழிபிறை, நற்சாந்துபட்டி, காந்திநகர், பகுதிகள்லே அது போல இளைஞர் மன்றங்கள் சமூக நாடகங்களை நடத்திக்கிட்டிருந்தாங்க )

         எங்களோட சமூக நாடகக்  கோரிக்கையை யாரும் காதுல வாங்கவே இல்லை.

         சரி நாமா ஏதாச்சும் செய்யணுமேன்னு  எனக்குள்ளே ஒரு எண்ணம் உருவாச்சு.ஆனா என்ன செய்யுறதுன்னு தெரியலே.

        1963... நான் பதினொன்றாம் வகுப்பு ( பழைய எஸ்.எஸ்.எல்.சி) படிச்சிக்கிட்டிருந்த  காலம் ... 

 அரைப் பரிச்சை லீவுலே ஒருநாள் என்னோட கருத்தைக் கொண்ட அஞ்சாறு பசங்களைச் சேத்துக்கிட்டு ஊருக்கு ஒதுக்குப் புறமா ஓடுன குண்டாற்றுக்குக் குறுக்கே கட்டியிருந்த சந்திரமதி அணைக்கட்டுப் பகுதியிலே கூடுனோம். அங்கே....


செவ்வாய், 12 நவம்பர், 2013

         புதுக்கோட்டை திருக்குறள் கழகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தோடு இணைந்து நடத்திய, சங்க இலக்கியப்  பயிலரங்கில்  11.12.2010 அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில், பாவலர் பொன்.க., எழுதி இயக்கிய “திருப்புக தேரை”,“ வாள் இங்கே நாக்கு எங்கே?” எனும் இரண்டு சங்க இலக்கிய நாடகங்களை “மணிச்சுடர்” கலைக்கூடம் வாயிலாக அரங்கேற்றியது.
          
         பங்கேற்ற கலைஞர்கள் புலவர்  மகா.சுந்தர், நா.செந்தில்பாண்டியன், பொன்.க.மதிவாணன், புலவர் மு.பா., மாது, இரா.நாகலெட்சுமி, சொ.இளங்கோ, சு.இராசேந்திரன் ஆகியோருடன்  பாவலர் பொன்.க.

திங்கள், 11 நவம்பர், 2013

அகவை 67ல் எனது நான்காவது வலைப் பக்கம்-முதல் இடுகை.

நட்புகளுக்கு வணக்கம்.

                       இன்று என் 67 ஆவது அகவையின் தொடக்கம் என்பதால்               “ பாவலர் பக்கம் ” என்னும் நான்காவது வலைப்பக்கத்தைத் திறந்திருக்கிறேன்.

                     என்னுடைய பிறந்தநாளில் இனிய வாழ்த்துகளை வாரி வழங்கிய எனது தோழமைகளுக்கு இதயங்கனிந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

                    என்னுடைய நாடகப் பதிவுகளை  இப்பக்கத்தில் இடுகையிடத் திட்டமிட்டுள்ளேன்.

                   இடுகை பற்றியத் தங்களின் கருத்துகள்  என் படைப்புகளுக்குச் செழுமை சேர்க்கும் என்னும் நம்பிக்கையுடன் .... பாவலர் பொன்.க.